வேதங்கள் மலை வடிவமாக வந்து இத்தலத்து இறைவனை வழிபட்டதால் இத்தலம் 'வேதகிரி' என்றும், மூலவர் 'வேதகிரீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகின்றார்.
சம்பு, ஆதி என்னும் இரண்டு முனிவர்கள் கழுகு வடிவம் கொண்டு தினமும் மதிய வேளையில் இம்மலைக்கு வந்து உணவு உட்கொண்டதால் இத்தலம் 'திருக்கழுக்குன்றம்' என்று அழைக்கப்படுகிறது. வடநாட்டில் இருந்து இங்கு வருவோர் இத்தலத்தைப் 'பக்ஷி தீர்த்தம்' என்றே கூறுவர். இங்கு மலைக்கோயில், தாழக்கோயில் என்று இரண்டு கோயில்கள் உள்ளன.
மலைக்கோயில் மூலவர் 'வேதகிரீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன் பெரிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'சொக்கநாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
தாழக்கோயில் மூலவர் 'பக்தவத்சலேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'திரிபுரசுந்தரி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட பல சன்னதிகள் உள்ளன.
மலைமீது உள்ள சுவாமியை இந்திரன் இடியாக வந்து வழிபடுகிறான் என்று கூறப்படுகிறது. இதற்காக மூலவர் கோபுரத்தின் விமானத்தில் ஒரு துளை உள்ளது. அதன் வழியாக இடி இறங்குவதாக கூறுகின்றனர். இதனால் கோயிலுக்கு சேதம் உண்டாவதில்லை.
மார்க்கண்டேயர் இத்தலத்திற்கு வந்து ஒரு தீர்த்தம் உருவாக்கி சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அந்த தீர்த்தம் மார்க்கண்டேய தீர்த்தம் என்று அழைக்கப்பட்டது. இறைவன் அருளால் அந்தத் தடாகத்தில் ஒரு சங்கு தோன்றியது. அதுமுதல் அந்த தீர்த்தம் 'சங்கு தீர்த்தம் என்று பெயர் பெற்றது. இந்த சங்கு தீர்த்தத்தில்தான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு கன்னி ராசியில் வரும்போது சங்கு தோன்றுகிறது. பொதுவாக உப்பு நீரில் தான் சங்குகள் தோன்றும். ஆனால் இங்கு குளத்து நீரில் சங்கு தோன்றுகிறது.
மாணிக்கவாசகர் இத்தலத்திற்கு வந்தபோது, அவர் வேண்டியபடி இறைவன் திருவடி தீட்சை அருளிய தலம். அதனால் தாழக்கோயிலில் மாணிக்கவாசருக்கு தனி சன்னதி ஒன்றும் உள்ளன.
சுந்தரமூர்த்தி இத்தலத்திற்கு வந்தபோது அவருக்கு பொருள் தேவைப்பட்டதால் இறைவனை வேண்டி பொன் பெற்றார்.
தேவாரம் பாடிய மூவரும் இம்மலையே சிவரூபமாக எண்ணி அதன் மேல் ஏறுவதற்கு அஞ்சி கீழிந்தபடியே பதிகம் பாடினர். அவர்கள் அவ்வாறு பாடிய இடம் 'மூவர் பேட்டை' என்று வழங்கப்படுகிறது. இங்கு மாணிக்கவாசகரையும் சேர்த்து நால்வர் கோயில் ஒன்று உள்ளது.
ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று அறுபத்து மூவருடன் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி கிரிவலம் வரும் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
திருமால், பிரம்மா, நந்திதேவர், இந்திரன், சூரியன், சந்திரன், வருணன், அஷ்ட வசுக்கள், வேதங்கள், சனக முனிவர், அகத்தியர், வசிஷ்டர், மார்க்கண்டேயர், விஸ்வாமித்திரர், அகலிகை, கங்கை முதலான நதிகள், பட்டினத்தார், சுரகுரு மன்னன் முதலானோர் வழிபட்ட தலம்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர். மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் இத்தலத்தைப் பாடியுள்ளார்.
அடிவாரக் கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். மலைக்கோயில் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 6.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|